இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..! அன்புமணி தாக்கு…!





சென்னை தியாகராய நகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் . கல்வி ,வேலைவாய்ப்பில் வன்னியர்கள் 10.5 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு பெற்றுள்ளதாக வெளியான தகவல் பெறும் உரிமைச் சட்ட விவரங்கள் குறித்து அவர் பேசினார். மேலும் அவர் பேசியதாவது, “ கடந்த 2 நாட்களாக வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பொய்யான செய்தி திமுக அரசால் வெளியிடப்பட்டு ஊடகங்களில் வந்துள்ளது. நேற்று முன்தினம் தமிழக அரசின் சில தரவுகளை வைத்து வன்னியர்களுக்கு 10.5 க்கு மேல் இட ஒதுக்கீடு கிடைப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பெயரை குறிப்பிடாமல் அரசின் அதிகாரிகள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர். யார் குறித்து செய்தி வெளியிட்டாலும் அவர்களிடம் அதை உண்மையா என்று உறுதிப்படுத்தி வெளியிடுவதே ஊடக தர்மம்.

10.5 % என ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது சாதி பிரச்சனை கிடையாது , சமூக நீதி பிரச்சனை. தமிழகத்தின் இரு பெரும் சமூகம் வன்னியர் , பட்டியலினத்தோர். இரு சமூகமும் 40 விழுக்காடு மக்கள் தொகை இருக்கின்றன. எம்பிசியில் 115 சாதிகள் தற்போது இருக்கின்றன , அதில் 114 சமூகங்கள் 6.7 % மக்கள் தொகை கொண்டவை , வன்னியர் சமூகத்தின் மக்கள் தொகை 14.1 % . இது அம்பாசங்கர் அறிக்கையின் தகவல்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கும் கேள்விக்கான பதிலை ஒரு மாதத்தில் கொடுக்கப்பட வேண்டும் , ஆனால் 11 மாதத்துக்கு முன்பு கேட்ட கேள்விக்கு இப்போது சில தரவுகளை மட்டும் வழங்கி அதை வெளியிட்டுள்ளனர். சமூக நீதிக்கு எதிராக வன்மத்துடன் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. குரூப்-4 தரவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளனர். எம்பிசி பட்டியலில் 1989 முதல் இட ஒதுக்கீடு பெற்ற சமூகங்கள் குறித்த கடந்த 30 ஆண்டுகால தரவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

குரூப்-1 , குரூப் 2 வில் முக்கிய பதவிகளை ஒரு சில சமூகங்களே பெற்று வருகின்றன. 109 உயர் காவல் அதிகாரிகளில் எத்தனை வன்னியர்கள் இருக்கின்றனர் ? ஒரே ஒருவர் மட்டும் ஐஜி பதவியில் இருக்கிறார். இதற்காகவா 21 பேர் உயிர் கொடுத்து இட ஒதுக்கீடு பெற்றோம்? இதுவா சமூக நீதி? இட ஒதுக்கீட்டுப்படி பார்த்தால் இது 0.0001 சதவீதம்தான். தமிழக அரசில் 53 துறைகள் உள்ளன , 123 செயலாளர்கள் உள்ளனர் , அதில் ஒருவர் மட்டுமே வன்னியர்.

நேரடி தேர்வு , பதவி உயர்வு என இரண்டையும் சேர்த்து வன்னியர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். ஆனால் இட ஒதுக்கீடு மூலம் நேரடியாக தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற தகவலைத்தான் கூறியிருக்க வேண்டும். இதுபோன்ற கேடு கெட்ட செயலை நிறுத்துங்கள் முதல்வரே . கருணாநிதி உண்மையில் சமூக நீதி மீது அக்கறை உள்ளவராக இருந்தார். ஆனால் மலிவான அரசியலை அவரது மகன் ஸ்டாலின் செய்கிறார் .

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கான தரவுகளை வழங்க தொடர்ந்து கால நீட்டிப்பு வழங்குகின்றனர். தங்களிடம் தரவுகள் இல்லை என ஆணையம் கூறிய அடுத்த 2 நாட்களில் சில தரவுகளை வெளியிடுகின்றனர். ஏன் இந்த நாடகம் . திமுகவுக்கும் சமூக நீதிக்கும் எள் அளவும் சம்பந்தம் கிடையாது.

திமுகவில் உள்ள 131 சட்டமன்ற உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் வன்னியர்கள் சமூகத்தை சேர்ந்தவர்களில் , வர்களில் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். பட்டியல் சமூகத்தில் மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் , அமைச்சரவையில் 3 பேர் இருக்கின்றனர். முக்குலத்தோரில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் , அவர்களுக்கு 5 அமைச்சர்களை கொடுத்துள்ளனர். வெள்ளாள கவுண்டர் 9 சட்ட மன்ற உறுப்பினர் , 3 அமைச்சர் பதவிகளை கொடுத்துள்ளனர் . நாடார் 7 சட்ட மன்ற உறுப்பினர் , 3 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முதலியார் 10 சட்ட மன்ற உறுப்பினர் , 2 அமைச்சர் பதவி இசை வேளாளார் 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் , 2 பேருக்கும் அமைச்சர் பதவி. ரெட்டியார் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் , 2 அமைச்சர்கள் உள்ளனர். முத்தரையர் சமூகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் , ஆனால் 1 அமைச்சர் பதவி மட்டுமே கொடுத்துள்ளனர். வன்னியர் , பட்டியல் சமூகத்தை சேர்ந்த 44 திமுக சட்ட மன்ற உறுப்பினர்களில் 6 பேர்தான் அமைச்சர்களாக உள்ளனர்.

அமைச்சரவையில் முக்கிய துறைகள் பட்டியலினத்தவருக்கு தருவதில்லை , மூத்த அமைச்சர்கள் குறித்த வரிசையில் பட்டியலினத்தவர்கள் ஏன் இல்லை..? பாமக இல்லை என்றால் கருணாநிதி மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கவே முடியாது. நாங்கள் நியாயமாக எங்கள் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை கேட்கிறோம் , அநியாயமாக எங்களுக்கு எதுவும் கேட்கவில்லை. வன்னியர் , முத்தரையர் , பட்டியல் சமூகம் உள்ளிட்ட அனைத்து சமூகமும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். முதல்வரையும் , பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரையும் சந்திக்கும் போதெல்லாம் தரவுகள் இல்லை , திரட்டிக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் இப்போது சில தரவுகளை மட்டும் வெளியிடுகின்றனர்.

வன்னியர்கள் 14 % இருக்கின்றனர் , 10.5 % ,12% என இட ஒதுக்கீடு கிடைத்தாலும் முழு பலன் இல்லை. 6.5% மக்கள் தொகையில் இருப்போர் எம்.பி.சியில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுகின்றனர். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்க DNC ல் உள்ள சில சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று கேட்கிறீர்கள் . இப்போது வெளியிடப்பட்ட தகவலில் வன்னியர்கள் 10.5 க்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறியுள்ளனரே..? எனவே கூடுதல் இட ஒதுக்கீடு பெறும் வன்னியர்கள் தற்போது குறைவாக 10.5 மட்டும் தானே கேட்கிறோம் என அவர்கள் விட்டுக் கொடுத்துவிடலாமே..

மக்கள் தொகை சர்வேயை எடுக்க முதல்வருக்கு பயம்.. பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து வருகின்றனர் , அவற்றை நீதிமன்றங்கள் தடை செய்யவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிகாரில் 3 மாதத்திலேயே கணக்கெடுப்பை முடித்து விட்டனர். இங்கிருக்கும் முதல்வருக்கு கல் மனசு , எனவே மக்கள் தொகை சர்வேயை எடுக்க மறுக்கிறார். திமுகவில் இருக்கும் வன்னியர் அமைச்சர்கள் உள் ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். வன்னியர் உள் ஒதுக்கீடு பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்கும். அருந்ததியர்களுக்கு 6 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க கருணாநிதியை வலியுறுத்தினோம். நாங்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதால் பின்னர் அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தனர்.

மக்கள் தொகை எண்ணிக்கையில் 3.44 சதவீதம் இருக்கும் DNC சமூகங்கள் , தங்கள் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு அதிக இட ஒதுக்கீடு பெறுகின்றனர் . அந்த DNC க்கு உள்ளேயே கூட 30 சமூகங்கள் எந்த பலனையும் பெறவில்லை , அந்த பட்டியலுக்குள்ளும் சில சமூகங்களே பலன் பெற்றுள்ளன. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் நாங்கள் கேட்கும் தகவல்களை தர மறுக்கின்றனர் , எங்களது மனுக்களை நிராகரித்து விடுகின்றனர். தற்போது சில தரவுகளை மட்டுமே வைத்து வெளியடப்பட்ட விவரங்களை சட்ட ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் நாங்கள் அணுக உள்ளோம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பிரதமரிடம் உறுதியாக நாங்கள் கேட்போம் , தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம். 2026 ல் இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ளது மத்திய அரசு. நான் மத்திய அமைச்சராக இருந்த காலம் முதல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகிறேன்.” என்று கூறினார்.