மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்! அதிமுக, ஒய்எஸ்ஆர்-ஐ நம்பி இருக்கும் பாஜக!



நாடாளுமன்ற மாநிலங்களவை என்பது, 12 நியமன உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்டது. இந்த மொத்த எண்ணிக்கையை கணக்கிடும்போது ஒரு மசோதாவை நிறைவேற்ற பெரும்பான்மை (தேவை) எண்ணிக்கையாக கருதப்படுவது 123 உறுப்பினர்கள் ஆதரவு. ஆனால் தற்போது மாநிலங்களவையின் பலம் 226-ஆக உள்ள நிலையில் தனிப் பெரும்பான்மைக்கு 114 உறுப்பினர்கள் தேவை

இந்நிலையில் மாநிலங்களவை நியமன எம்பிக்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகால், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய நான்கு பேரும் நேற்றுடன் ஓய்வு பெற்றதால், தற்போது மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86 ஆக குறைந்துள்ளது. அதனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101 என்ற நிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தற்போது 87 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 26, திரிணாமுல் காங்கிரஸுக்கு 13, திமுக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு தலா 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். 9 உறுப்பினர்களை கொண்ட பிஜு ஜனதா தள கட்சியும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி கொண்டு எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.

இதனிடையே பாஜக மட்டுமல்லாது என்.டி.ஏ. கூட்டணிக்கே மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் புதிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவையில் காலியாக உள்ள 11 இடங்களில் 10 இடங்கள் மக்களவை தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர்கள் வென்றதால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. காலியான இடங்களில் இந்தியா கூட்டணி சார்பில் 3 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக, காங்கிரஸ் 2 கூட்டணிகளிலும் இல்லாத அதிமுகவுக்கு 4 உறுப்பினர்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு! 11 உறுப்பினர்களும் உள்ளனர். எந்த அணியிலும் இணையாமல் உள்ள அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங். ஆதரித்ததால்தான் பாஜகவால் புதிய மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியும்.