மேல்மருவத்தூர் - பங்காரு அடிகளாரின் உடலுக்கு.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..
சென்னை: புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.. பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடக்கிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பங்காரு அடிகளாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திண்டிவனம் செல்லும் வழியில் அமைந்துள்ளது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில். இந்த கோவிலை கட்டியவரும், ஆதிபராசக்தி கோவிலின் தலைமை ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்தவர் பங்காரு அடிகளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியவர்.
பெண்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது என்ற விதியை தகர்த்தெறிந்து, பெண்களை கோவில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்கு மாற்றங்களை கொண்டுவந்தவர்.. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கென்று பக்தர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இவரை அம்மனின் அருள்பெற்றவராக பக்தர்கள் வணங்கி வந்தனர்.. பக்தர்களால் "அம்மா" என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர்.
ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி, அதன்மூலம் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அடிகளார் செய்து வந்தார். 2 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பங்காரு அடிகளார்.. நெஞ்சு பகுதியில் சளி பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பங்காரு அடிகளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த மறைவு செய்தி, அவரது பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பங்காரு அடிகளார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தீபாவளிக்காவது கிடைக்குமா? அண்ணாமலை சொல்லும் டிப்ஸ் அவருடைய உடல், அவருடைய வீட்டினுள் பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செவ்வாடை அணிவிக்கப்பட்டு ஐஸ்பெட்டியில் கிடத்தப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வீடு முன்பு குவிந்தபடியே உள்ளனர்.. அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு பக்தர்களாக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள பங்காரு அடிகளார் பக்தர்கள் தங்களது அஞ்சலியை இணையதளத்தில் பதிவு செய்தவாறே உள்ளனர்.. வீடியோ பதிவாகவும் வெளியிட்டு தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
பங்காரு அடிகளாரின் உடலுக்கு தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள். பங்காரு அடிகளார் உடலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். இறுதிச்சடங்கு: பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடக்கிறது. தான் இறந்தால் அடக்கம் செய்வதற்காக மேல்மருத்துவத்தூர் கோயில் தியான மண்டபம் அருகிலேயே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார் அடிகளார். இங்குதான் அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று பங்காரு அடிகளாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.. பின்னர், பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்..