நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து கலந்துரையாடல்




மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து கலந்துரையாடல் செய்ய திட்டமிட்டார். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவ-மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் கவர்னர் பேசினார். பின்னர் மாணவர்களிடம் கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார். மாணவர்கள் ஆர்வமாக அவருடன் பேசினர்.

சேலத்தை சேர்ந்த பெற்றோர் ஒருவர் கவர்னரிடம் நீட் விலக்கு மசோதாவில் தாங்கள் கையெழுத்து போடாமல் இருக்கிறீர்களே? என்று கேட்டார். அதற்கு கவர்னர் ஆர்.என். ரவி பதிலளித்து கூறியதாவது:- நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் நான் கையெழுத்து போட மாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கிவிடும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

நீட் குறித்த தவறான புரிதல் இந்த மாநிலத்தில் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் நீட் தொடர்பான தற்கொலைகள் பற்றி கேள்விப்படவில்லை. அதற்கு முன்பு எந்த மாணவர் இறந்தாலும் நீட் தேர்வு தான் காரணம் என தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பயிற்சி மையத்தில் படித்தால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதெல்லாம் போலி பிம்பம். நீட் தேர்வு வந்த பிறகு ஏழை, எளிய, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீட் தேர்விற்கு முன்பு ரூ.1000 கோடி வியாபாரமாக மருத்துவ படிப்பு இருந்தது. இன்று நிலைமை மாறி உள்ளது. மருத்து ஊழலை நீட் தேர்வு தடுத்துள்ளது. தேசத்திற்கு நீட் தேர்வு கண்டிப்பாக தேவை. பல ஆயிரம் கோடி ஊழல் நிறைந்த மருத்துவ படிப்பை ஊழல் இல்லாததாக நீட் மாற்றி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.