சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்




இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது.

சந்திரயான்-3' விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

'சந்திரயான்-3' விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட அன்று புவிவட்ட சுற்றுப்பாதையில் முதல் கட்டமாக 41 ஆயிரத்து 762 கி.மீ. அதிகபட்சமாகவும், குறைந்த பட்சம் 173 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது. இதனை படிப்படியாக உயர்த்தும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கடந்த மாதம் 15-ந் தேதி 2-ம் கட்டமாக அதிகபட்சமாக 41 ஆயிரத்து 603 கி.மீ. தொலைவிலும், குறைந்தபட்சம் 226 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது.

தொடர்ந்து 3-வது கட்டமாக அதிகபட்சமாக 71 ஆயிரத்து 351 கி.மீ., குறைந்தபட்சம் 233 கி.மீ. சுற்றுப்பாதையில் பயணித்து வந்தது. இப்படி படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்த விண்கலம், கடந்த 1-ந் தேதி நிலவு வட்ட சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 288 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 3 லட்சத்து 69 ஆயிரத்து 328 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி நிலவு சுற்றுவட்டப்பாதையில் குறைந்தபட்சம் 164 கி.மீ., அதிகபட்சம் 18 ஆயிரத்து 74 கி.மீ. என்ற அளவில் உயரம் குறைக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் உயரம் குறைக்கும் பணியில் குறைந்தபட்சம் 170 கி.மீ., அதிகபட்சம் 4 ஆயிரத்து 313 என்ற அளவில் சுற்றி வந்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த 9-ந் தேதி மீண்டும் உயரம் குறைக்கப்பட்டதில், குறைந்தபட்சம் 174 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 1,437 கி.மீ. தொலைவிலும் பயணித்தது. தொடர்ந்து கடந்த 14-ந் தேதி உயரம் குறைப்பு பணியில் குறைந்த பட்சம் 151 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 179 கி.மீ. என்ற சுற்றுப்பாதையிலும் சுற்றி வந்தது. தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மீண்டும் உயரம் குறைக்கப்பட்டது. இதன்படி குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 163 கி.மீ. என்ற அளவிலும் சுற்றி வருகிறது.

தற்போதைய நிலையில், 'சந்திரயான்-3' 100 கிலோ மீட்டர் தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திட்டமிட்டபடி 23-ந் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலம் தரையிறங்க இருக்கிறது. இதனையொட்டி 'சந்திரயான்-3' விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை (புராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல்) தனியாக பிரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் இன்று இறங்கினர். அதன்படி, நிலவை நெருங்கிய நிலையில் 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இனி இவை இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கும். விக்ரம் லேண்டர் தொடர்ந்து படிப்படியாக நெருக்க உள்ளது. லேண்டர் பாதை குறைப்பு பணிகள் நாளை மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்பிறகு லேண்டர் நிலவில் எங்கு தரையிறங்குவது என்று முடிவு செய்யப்படும். இதற்காக நிலவில் தரை இறங்குவதற்கான இடங்களை புகைப்படம் எடுத்து உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.