டுவிட்டரின் புதிய லோகோ X - எலான் மஸ்க் அதிகாரபூர்வ அறிவிப்பு
சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரீ பிராண்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எலான் மஸ்க் மட்டுமின்றி டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோவும், X பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். மேலும் X லோகோவை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது.., "வாழ்க்கையோ அல்லது வியாபாரமோ, பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான காரியம் ஆகும். ஒருமுறை டுவிட்டர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்ற முறையை அடியோடு மாற்றியது. தற்போது X இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும். கடந்த 8 மாதங்களாக X வடிவம் பெற்று வருகிறது, ஆனால் இது வெறும் துவக்கம் மட்டும் தான்," என்று தெரிவித்தார். இதோடு X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். X-ஐ உலகிற்கு கொண்டுவருவதற்கான பணிகளில் டுவிட்டர் பணியாற்றி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.