அ.தி.மு.க. உடையவில்லை; கட்டுக்கோப்பாக இருக்கிறது- எடப்பாடி பழனிசாமி உற்சாக பேட்டி
பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயார் ஆகி வரும் நிலையில் அ.தி.மு.க.வை தயார்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு உள்ளார். அடுத்த மாதம் மதுரையில் மாநாடு நடத்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று அவர் சென்னையில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார். சென்னை ராயப்பேட்டை தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கட்சியினர் எத்தனையோ வித்தைகளை அரங்கேற்றினார்கள். அத்தனையும், கழக தொண்டர்கள், நிர்வாகிகள் மூலம் தகர்த்தெறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்தோம். அ.தி.மு.க. 3 ஆக, 4 ஆக போய் விட்டது. அதில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்து போய் விட்டது என்று எதிரிகள் விமர்சனம் செய்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற விதமாக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த பணியை எழுச்சியோடு மேற்கொண்டு ஒன்றரை மாத காலத்தில் 1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து சரித்திரம் படைத்து இருக்கிறோம்.
இனி அ.தி.மு.க. வெற்றிடம் கொண்டது அல்ல என்பதை நிரூபித்துள்ளோம். இனி அந்த வார்ததையை யாரும் பயன்படுத்த வேண்டாம். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான். வேறு எந்த கட்சியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் கிடையாது. அதுவும், இளைஞர்கள், சகோதரிகள், கழக உடன்பிறப்புகள் நிறைந்த இயக்கம் அ.தி.மு.க.தான். இது தொண்டர்கள் நிறைந்த கட்சி. சில பேர் இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். தி.மு.க.வுக்கு 'பி' அணியாக இருந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு இந்த 75 நாட்களில் கழக தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அற்புதமாக செயல்பட்டு அ.தி.மு.க. உடையவும் இல்லை, சிந்தவும் இல்லை. சிதறவும் இல்லை, கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை இந்த உறுப்பினர் சேர்க்கையின் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அடுத்து வருகின்ற தேர்தலுக்கு அடித்தளமாக எங்களுடைய வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.