மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் - உள்துறை மந்திரி அமித் ஷா





பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று 3-வது நாளாக அமளி நிலவியது. பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதேபோல், மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தில் அமளி காணப்பட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 11 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து சஞ்சய்சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உணர்வுபூர்வமான விவகாரத்தில் உண்மை என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.