மகளிர் உரிமைத்தொகை:
குடும்ப தலைவிகளுக்கு
விண்ணப்பம் வழங்கப்படுகிறது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. நடப்பு ஆண்டில் 1 கோடி பெண்களுக்கு உதவி தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் வீடு வீடாக நேற்று முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கும் வகையில் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் வழியாக மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் வழங்கப்படுகிறது.
சென்னையில் 2 கட்டமாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் நாளைக்குள் (சனிக்கிழமை) கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு வேளை விடுபட்டவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் வழங்கப்படலாம். 24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அவரவருக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரத்திற்கு சென்று சமர்பிக்க வேண்டும். படிவங்களை பூர்த்தி செய்ய இயலாதவர்களுக்கு முகாம்களில் உதவி செய்ய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய பணி மாலை 5 மணி வரை நடந்தது.
தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 2¼ கோடி பேர் பயன்பெற்று வருகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சலுகை இல்லை. மேலும் ஆண்டிற்கு 2.5 லட்சம் வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் இது தவிர ஏற்கனவே பிற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவி தொகை பெறுபவர்களும் மகளிர் உரிமைத் தொகையை பெற முடியாது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று 2-வது நாளாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. நாளைக்குள் 90 சதவீதம் பேருக்கு படிவங்கள் சென்றடையும் வகையில் ஊழியர்கள் முனைப்புடன் பணியில் ஈடுபட்டுள்ளனர். படிவம் பெற முடியாமல், விடுபட்டு போனால் கூட பயப்பட தேவையில்லை. ரேசன் கார்டை நியாய விலை கடைகளுக்கு நேரில் கொண்டு சென்றால் கூட படிவங்கள் வழங்கப்படும். படிவங்கள் வழங்குவதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். சென்னையில் வடக்கு, மத்தியம், தெற்கு என 3 மண்டலங்களாக பிரித்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. சென்னையில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மகளிர் உரிமை தொகை பெற தகுதி உடையவர்களாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் படிவங்களை வழங்கி, பெறுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 1.5 லட்சம் பேருக்கு நேற்று படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.