லைசென்ஸ் வாங்க புதிய நடைமுறையால்
விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்
தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு கார் மற்றும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் சுமார் 100 பேர் லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டு இதற்கான ஒதுக்கீடு நாள் ஒன்றுக்கு 50 ஆக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணியினை நிக் என்ற நிறுவனம் எழிலகத்தில் உள்ள கன்ட்ரோல் அறையில் இருந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு காருக்கு 15 நபர்களும், இருசக்கர வாகனங்களில் கியர் வாகனங்களுக்கு 20 நபர்களும் கியர் இல்லாத வாகனங்களுக்கு 15 நபர்களும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க செல்லும் போது ரெயில் டிக்கெட் போல் காலை 6 மணிக்கே முடிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏற்பட்ட இந்த பாதிப்பில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து புகார் அதிகமாவதால் பூந்தமல்லி 80, மீனம்பாக்கம் 70 ஆகிய இடங்களில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகம். இந்த அலுவலகத்துக்குட்பட்டு 35 டிரைவிங் பயிற்சி பல்ளிகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 50 நபர்களுக்கே விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லைசென்ஸ் அப்பாயின்மெண்ட் கிடைக்காமல் ஏராளமான பொதுமக்கள் தினமும் ஏமாந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. நான் டிரைவிங் பயிற்சி பெற்று எல்.எல்.ஆருக்கு விண்ணப்பித்து அதனுடைய கால அவகாசம் வரும் செவ்வாய் கிழமையுடன் முடிகிறது. பலமுறை ஆன்லைனில் விண்ணப்பித்தும் எனக்கு கிடைக்கவில்லை. என்னைப்போல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் அதிக பணத்தை பெற்றுக்கொண்டு ஆன்லைனில் ஒதுக்கீடு பெற்று கொடுக்கின்றனர். இப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.