மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாகிறது- நாளை தீவிர புயலாக மாற வாய்ப்பு




சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் உருவானது. நேற்று இரவு அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. நீண்ட நேரமாக அந்த காற்றழுத்தம் அதே பகுதியிலேயே நிலை கொண்டு இருந்தது. பிறகு அது மெல்ல வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கியது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மதியம் முதல் வலுவடைய தொடங்குகிறது. இன்று மாலை அது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புயலுக்கு மோக்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புயலாக மாறிய பிறகு அது சற்று வேகமாக நகரக்கூடும். தொடர்ந்து அந்த புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நாளை அதன் நகரும் திசையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள அந்த புயல் சின்னம் நாளை மாலை தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அது அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அது வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும்.

தற்போது அந்த புயல் சின்னம் வங்கதேசத்தில் இருந்து கடலுக்குள் 1,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதன் நகரும் வேகம் 5 கிலோ மீட்டராக உள்ளது. நாளை மாலை அதன் நகரும் வேகம் அதிகரிக்கும். 13-ந்தேதி (சனிக்கிழமை) அது தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி வேகமாக நகரும் அதற்கு அடுத்த நாள் (14-ந்தேதி) அந்த புயல் வங்கதேசம்-மியான்மர் இடையே கரையை கடக்கும். அப்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாவதை தொடர்ந்து மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்த்து உள்ளனர். தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

நாகையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான படகுகள் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. புயல் உருவாவதை முன்னிட்டு தமிழக கடலோர பகுதிகளில் லேசான மழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக இருப்பதால் தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தொங்க விடப்பட்டு உள்ளது. புயல் சின்னத்தின் நகர்வை சென்னை வானிலை ஆய்வு மையத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இது தொடர்பாக இன்று பிற்பகல் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.