வைகை குண்டாறு இணைப்பு திட்டம்
நிச்சயம் நிறைவேறும்துரைமுருகன் தகவல்
நிச்சயம் நிறைவேறும்
சென்னை: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு தொடர்பான பணிகளை விரைவுபடுத்தக்கோரி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது காமராஜர் காலத்தில் இருந்து அனைத்து முதலமைச்சர்களும் நிறைவேற்ற வேண்டும் என பேசினார். பல முதலமைச்சர்களின் கனவுத்திட்டமான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தற்போதைய எதிர்க்கட்சித்தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தான் நிர்வாக அனுமதி வழங்கியதோடு 700 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியதாகவும் விஜயபாஸ்கர் பேசினார்.
ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கான நில எடுப்பு பணிகள், கால்வாய் வெட்டும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் நேரடியாக வந்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்தார். மேலும் நதியை போல நாமும் நடந்து பயன் தர வேண்டும் என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாடி நிதியை தாரளமாக ஒதுக்கி தர வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித்தலைவர் தான் அந்த திட்டத்தை கொண்டுவந்தது போலவும், வேறு யாருமே சிந்திக்காததை போலவும் உறுப்பினர் கெட்டிக்காரத்தனமாக பேசுவதாக கூறினார். காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து முதன்முதலாக சிந்தித்து நிதியை ஒதுக்கி கதவணை கட்டியவர் கருணாநிதி தான் எனவும் துரைமுருகன் விளக்கமாக பேசினார்.
அதிமுக ஆட்சியில் 71 ஏக்கர் நிலங்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட தாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியிருப்பதாகவும் துரைமுருகன் பதிலளித்தார். அதிமுக ஆட்சியில் நிலம் எடுத்த பிறகு எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என தெரிவித்த துரைமுருகன், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 64 சதவிகிதம் கால்வாய் வெட்டும் பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் பணிகள் நிறைவடைந்து மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேறும் எனவும் துரைமுருகன் உறுதியளித்தார்.