கலைஞர் நூற்றாண்டையொட்டி கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி - ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி




சென்னை: சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டையொட்டி கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான முன்பதிவு சென்னை மாநில கல்லூரியில் இன்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முன்பதிவை தொடங்கி வைத்தார். வீரர்கள் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்தனர். திருநங்கைகளுக்கு ரூ.100 பதிவுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டணத்தை தென்சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. ஏற்றுக் கொண்டது. அதேபோல் மாநில கல்லூரி மாணவர்கள் எத்தனை பேர் பதிவு செய்தாலும் அவர்களுக்கான கட்டணத்தையும் ஏற்றுக் கொண்டனர். இன்று ஒரே நாளில் 1600 மாணவர்கள் பதிவு செய்தார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநங்கைகள் எவ்வளவு பேர் பதிவு செய்து மாரத்தானில் ஓடினாலும் அவர்களுக்கு தலா ரூ.1000 நான் ஊக்கத்தொகையாக வழங்குவேன் என்று அறிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "உடல் தகுதியை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடத்திலும் 2-வது இடத்தில் மா.சுப்பிரமணியனும் இருக்கிறார்கள். மா.சுப்பிரமணியன் மாரத்தான் வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களைப்போல் இளைஞர்களும் தங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி, தயாநிதிமாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காரம்பாக்கம் கணபதி, அரவிந்த் ரமேஷ் புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் சங்கீதா பாரதி ராஜன், மண்டல தலைவர்கள் துரைராஜ், கிருஷ்ண மூரத்தி மாவட்ட செயலா ளர் சிற்றரசு, கோட்டூர் சண்முகம், க.தனசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முன்பதிவு ஆகஸ்ட் 1-ந்தேதி வரை நடக்கிறது. இணையதளத்திலும் முன் பதிவு செய்யலாம்.