தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் தொடங்குகிறது: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்




சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி நேற்று முடிந்தது. பிளஸ்-1 தேர்வு 14-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று நாளையுடன் நிறைவுபெறுகிறது. இதையடுத்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (6-ந்தேதி) தொடங்குகிறது. இத்தேர்வை 9 லட்சத்து 97 ஆயிரத்து 89 பேர் எழுதுகிறார்கள். சிறை கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வில் தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் ஆப்சென்ட் இல்லாமல் முழு அளவில் மாணவர்களை தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை மறுநாள் தமிழ் தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 7-ந்தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை நாளாகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு 10-ந்தேதி (திங்கட்கிழமை) ஆங்கிலம் தேர்வு நடக்கிறது. 13-ந்தேதி கணிதம், 15-ந் தேதி விருப்ப மொழிப்பாடம், 17-ந்தேதி அறிவியல் தேர்வும் 20-ந்தேதி சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவுபெறுகிறது.

மாணவர்கள் தேர்வு கூடங்களில் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் தேர்வு மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர்கள் கட்டாயம் தேர்வு மையத்திற்கு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற சம்பவங்களை தடுக்க பறக்கும் படையினர் அவ்வப்போது தேர்வு மையங்களில் ஆய்வு செய்கிறார்கள். அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் எவ்வித தவறுக்கும் இடம் அளிக்காத வகையில் தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.