எடப்பாடி பழனிசாமி போட்டோவுடன் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அட்டை தயாராகிறது
சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த வரையில் அந்த பதவி அதிகாரம் மிக்க பதவியாகவே இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டார். இதன் பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வந்த நிலையில்தான் தற்போது அ.தி.மு.க. ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
முதல் நாள் மாவட்ட செயலாளர்களுடனும், மறுநாள் மாநில நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டங்கள் முடிந்த பின்னர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையில் தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி புகைப்படமும் உறுப்பினர் அட்டையில் இடம்பெறும் என்கிற புதிய தகவலும் வெளியாகி இருக்கிறது. அ.தி.மு.க. நிறுவன தலைவரான எம்.ஜி.ஆர். கட்சியை ஏழை மக்களிடம் கொண்டு சேர்த்து வலுவாக்கினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு தலைமை பொறுப்பை வகித்த ஜெயலலிதா கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுவாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றினார்.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி வருகிறார். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமியின் படமும் புதிய உறுப்பினர் அட்டையில் இடம்பெற இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று கட்சியின் தலைமை பதவியை முழுமையாக கைப்பற்றிய பின்னரே எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிரிந்து சென்ற அ.தி.மு.க.வினரை மீண்டும் கட்சியில் சேர்க்க முனைப்பு காட்ட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனை தவிர்த்து மற்ற அனைவரையும் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் பிரிந்து சென்றவர்களை அ.தி.மு.க.வில் சேர்க்கும் முயற்சிகளை கட்சியினர் செய்து முடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளார். இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் ஓ.பி.எஸ். அணியில் இருந்தும், தினகரன் கட்சியில் இருந்தும் மேலும் பல நிர்வாகிகள் விலகி விரைவில் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.