இந்திய திரை உலகுக்கு மிகப்பெரிய கவுரவம் அளித்த ஆஸ்கர் விருதுகள்




லாஸ் ஏஞ்சல்ஸ்: சினிமா கலைஞர்களுக்கு எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆஸ்கர் விருது பெறுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள். ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று பங்கேற்பதையும் சினிமா கலைஞர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். இதனால் ஆஸ்கர் விருது பெறுவது சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டு சினிமா கலைஞர்களுக்கும் மிகப்பெரிய கனவாக உள்ளது. இந்த ஆண்டு 95-வது ஆண்டாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த கோலாகல விழாவில் உலகின் பல்வேறு நாட்டு சினிமா கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர், ஆல்தட், பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 3 படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் மூலப்பாடல் வகையில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆல்தட் பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 2 படங்களும் ஆவண குறும்படங்கள் வரிசையில் இடம்பெற்று இருந்தன. ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் இத்தனை படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த தடவை 'நாட்டு நாட்டு' பாடலுக்கு எப்படியும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது. இந்த பாடல் உலக அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்ததாலும், ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றதாலும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி (மரகதமணி) பாடகர்கள் ராகுல், கால பைரவா இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் விழாவில் பார்வையாளர்களாக பங்கேற்றனர். பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் வித்தியாசமான உடை அலங்காரத்தில் பங்கேற்றார். விழாவில் ஒவ்வொரு பிரிவாக விருதுகள் அறிவிக்கப்பட்டபோது பலத்த கரகோஷம் நிலவியது. முதலில் குறும்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த 2 குட்டி யானைகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையேயான பாச பிணைப்பை சித்தரித்து எடுக்கப்பட்டு இருந்தது. கார்திகி இயக்கிய இந்த படம் 39 நிமிடங்கள் ஓடும் வகையில் இருந்தது.

தமிழில் தயாரிக்கப்பட்ட இந்த படம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் குட்டி யானைகள், ரகு, பொம்மி மற்றும் இந்த யானைகளை பராமரிக்கும் பாகன் பொம்மன், அவர் மனைவி பெல்லி ஆகியோரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. நெட்பிளிக்சில் கடந்த ஆண்டு இந்த படம் வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்றது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. தமிழ் ஆவண குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் தமிழ் திரை உலகினர், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து பாடல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சேர்ந்து ஆடியிருப்பது போன்று கலைஞர்கள் ஆடி ஆஸ்கர் விருது விழா பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தது. அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர். அதன்பிறகு 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி அதை பெற்றுக்கொண்ட னர். அவர்கள் இருவரும் விழா மேடையில் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்து பேசினார்கள். 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்றிருந்த 'ஜெய்ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அந்த பாடலுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. தெலுங்கு பாடலான அந்த பாடல் 4.35 நிமிடங்கள் ஓடக்கூடியது. இந்த 4 நிமிடமும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சிறப்பாக ஆடியது உலகையே கவர்ந்துள்ளது.