10.5 இடஒதுக்கீடு அரசு மவுனம்! பதில் என்ன..? தியாகத்தின் வரலாறு பேசுகிறது…!


வன்னியர்களின் கனவான தனி இட ஒதுக்கீடு, வானத்து மின்னலாய் வந்து மறைந்து, தற்பொழுது கானல் நீராய் காட்சியளிக்கிறது. சமூக நீதியின் தாய்வீடாம் தமிழகம், வன்னியர்களுக்கு மட்டும் மாற்றாந்தாயாகிவிட்டது. சிந்துபாத் கதையில் வருவதைப் போல், கழுத்தில் ஏறி அமர்ந்த கிழவன், இறங்க மறுப்பதோடு, தன்னை நிரந்தரமாய் சுமக்கச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்துவது என்ன நியாயம்? என்பது போல் தனி ஒதுக்கீடுகளின் பிதாமகனார் நீதியரசர் ஜனார்த்தனம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வன்னிய குல க்ஷத்திரியர்களுக்கு மட்டுமே, தனி இட ஒதுக்கீடு சாத்தியம் என்று பரிந்துரைத்தும், நட்ட பயிர் பட்டுப் போனது ஏன்?

அரசியல், சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும், தற்போது வியாபித்துள்ளது. அதிகாரத்தின் விளைநிலம் அரசியல், ஒரு தனி நபரை, ஒரு குழுவை, ஒரு சமூகத்தை அதிகாரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்வது அரசியல். அது சமூக நீதியை மட்டும் விட்டு வைக்குமா என்ன?

சமூக நீதியை முதலில் பேசியது நீதிக்கட்சி அதிகாரம் பிராமணர்களின் ஏகபோக சொத்து அல்ல என்று அவர்கள் தமிழக மக்கள் மனங்களில் மூட்டிய தீ இன்னும் கனன்று எரிந்து கொண்டிருக்கிறது. ஜாதிகள் இல்லையடி என்று சொன்ன பாரதியார், காந்திஜியின் மனசாட்சி என்று பாராட்டப்பட்ட இராஜாஜி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை (ஹரிஜன், தலித்) இட்டுச் சென்ற மதுரையின் வழக்கறிஞர் வைத்தியநாத அய்யர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் அநேகம் பேர் இருந்தும், பிராமணர்கள் ஒரு சமூகமாக கடந்தகால நிகழ்வுகளுக்காக, பழி சுமந்து அல்லல்படுவதற்குக் காரணம், அதில் உள்ள சமூக அரசியல்.

பெரும்பான்மையே ஆள்பவரை முடிவு செய்வது ஜனநாயகம், இதில் அரசியல் அத்தியாவசியமானது. அதனை சரியாகப் பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டத்தில் நிரந்தர சலுகைகளை தலித்துகளுக்குப் பெற்றுத் தந்தவர் அண்ணல் அம்பேத்கர். மததிற்காகவோ, அரசியல் அதிகாரத்திற்காகவோ, சுய இலாபத்திற்காகவோ, தனது தலித் அடையாளத்தை இறுதிவரை இழக்காதவர் இவர். அதுபோன்றதொரு தலைவர் வன்னிய சமுதாயத்திற்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. திறமை இருந்தால், அதிகாரமில்லை. அதிகாரமிருந்தால் அடையாளமில்லை. அடையாளம் இருந்தால், சமூக அங்கீகாரமில்லை. அரசியலில் உயர்ந்தால் தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை. இப்படி ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்ற நிலை வன்னியர் சமூகத் தலைவர்களுக்கு இன்றுவரை இருந்து வருகிறது.

நீண்ட நெடுங்காலமாக சமூக சிந்தனை வன்னியர் பெருமக்களுக்கு உள்ளது. காங்கிரஸ் பேரியக்கம், தொடங்கப்படுவதற்கு முன்பே, 1882-ஆம் ஆண்டே சங்கம் அமைத்தவர்கள், தங்களது சமூகம் புறக்கணிக்கப்பட்ட போது, காங்கிரஸை எதிர்த்து தனிக்கட்சி அமைத்து, 1952ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் 25 எம்.எல்.ஏக்களையும் 5 எம்.பிக.களையும் வென்று காட்டியவர்கள். ஆனால் அதிகாரம் அவர்களை ஜீரணித்த போது, மாணிக்கவேல் நாயக்கர் மாணிக்கவேலனார் ஆனார். இராமசாமிப் படையாச்சியாரால் ஒருமுறைக்கு மேல் மறுமுறை அமைச்சராக முடியவில்லை. காரணம் அவர்களது அடையாள இழப்பு.

இந்த அடையாளத் தேடல் தான் இன்றைய வடிவம் தான் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை அதற்கான அங்கீகாரம் தான் 26.2.2021 அன்று பிறப்பிக்கப்பட்ட வன்னியர்க்கான தனிஉள்இட ஒதுக்கீட்டுச் சட்டம் 8’2021 தலித்துகளுக்கு அவர்களது மக்கட்தொகைக்கேற்ப 18 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்குமானால், 20 லட்சம் மக்கட்தொகை கொண்ட முஸ்லீம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்குமானால், 1983-ம் ஆண்டே 65,04,885 (அப்பொழுது மொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணிக்கை 4.99 கோடி) அளவிற்கு மக்கட்தொகை, இருக்குமானால் 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு ஏன் இருக்கக் கூடாது?

ஆனாலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் அநியாயமாக பலனடைந்த சிலர், நியாயமான இந்த கோரிக்கையை அரசியலாக்கி, பாட்டாளி மக்கட் கட்சியின் நிர்ப்பந்தத்திற்கு அ.இ.அ.தி.மு.க. அடி பணிந்தது என்ற அரசியல் பிம்பத்தை உருவாக்கினார்கள்.

மகாபாரதத்தில் கௌரவர்களின் சக்கர வியூகத்தை உடைத்துச் சென்ற அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவை, கர்ணன், துரோணர், அசுவத்தாமன், ஜெயத்ரதன் போன்ற வீரர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கிக் கொன்றதைப் போல, தமிழகத்தின் பிற சாதி சங்கத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். சிலப்பதிகார காலந்தொட்டு, நீதிப் பிறழ்வுக்குப் பெயரெடுத்த, மதுரை இம்முறையும் அதே சரித்திரப் பிழையைச் செய்தது. அதுபோது, ஊடகங்களில் நடுநிலையாளர்கள் என்று களமாடுபவர்கள் அநேகம் பேர், வன்னியர்களுக்கு எதிரான தங்களது வக்கிர முகத்தை வஞ்சனையில்லாமல் காட்டினர்.

இந்த தனி இட ஒதுக்கீட்டை ஒர் அரசியல் தலைவருக்கு அளிக்கப்பட்ட அநியாய சலுகை என்று வெகு ஜன அபிப்ராயத்தை மடைமாற்ற தங்களால் ஆனவரை முயன்றனர். தங்களது உரிமையை மறந்து, வறுமையில் உழன்று கிடக்கும் ஏழை வன்னியர்கள் எவரும் இவர்களது கண்ணுக்கும் கருத்துக்கும் தென்டவில்லை. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் தான் மிக மிக பின்தங்கிய மாவட்டங்கள் என்று மாநில திட்டக் குழு அளித்திருக்கும் புள்ளி விவரங்கள் அவர்களது மனதைத் தொடவில்லை. இந்த உள்இட ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குள் தான் இதனால் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றாலும், அந்த சமூகத் தலைவர்கள் தெரிவித்த எதிர்மறையான கருத்துக்களைப் பார்க்கும் பொழுது, இதுவரை பல்லக்கை தூக்கிக் கொண்டிருந்த பல்லக்குத் தூக்கிகள் எங்கே தங்களுடன் பல்லக்கில் சவாரி செய்ய வந்து விடுவார்களோ, என்ற அவர்களது தொலைநோக்கு அச்சமும், வன்னியர்க்கு எதிரான வன்மமும் அன்றி வேறொன்றும் தென்படவில்லை. தங்களது மக்கள் தொகைக்கு ஈடாக அனைத்து அரசு வேலைகளிலும் இட ஒதுக்கீடு பெற்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை அனைத்துவிதமான அதிகாரப் பதவிகளிலும் அமர்ந்து ஆட்சி புரியும் பட்டியலினச் சகோதரர்களின் தலைவர்கள் கூட இந்த உள்இட ஒதுக்கீட்டை மனப்பூர்வமாக ஆதரிக்காததை நினைக்கையில், நீயுமா புரூட்டஸ் என்று ரோமாபுரி மன்னன் ஜுலியஸ் சீசர் கூறிய வாழ்வின் இறுதி வார்த்தைகள் ஏனோ நினைவுக்கு வருகிறது.

உள்இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்த அன்றைய ஆளுங்கட்சியின் மாற்று இனத் தலைவர்கள், ஊடகங்களில் பேசும்போது, இந்த உள்இட ஒதுக்கீடு ஓர் அரசியல் கட்சியின் நெருக்குதலால் உருவான அரசியல் நிகழ்வு என்று கூறினார்களேயொழிய இந்த உள்இட ஒதுக்கீட்டுக்கான அரசாணை முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவால் பிறப்பிக்கப்பட்டது என்றோ, அதன் அடிப்படையில் நீதியரசர் ஜனார்த்தனம் அவர்கள் அளித்த பரிந்துரை என்றோ, அப்பரிந்துரையையும் பத்தாண்டு காலம் அரசின் சிவப்பு நாடாவில் தாமதமாக அமல்படுத்தினோம் என்றோ கூறாமல் விட்டது. அவர்கள் வன்னியர்களுக்கு நெஞ்சறிய செய்த வஞ்சனை.

வன்னியர்களின் உள்இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு ஒட்டுமொத்த ஒதுக்கீட்டையுமே எதிர்க்கும் கூட்டத்தினரிடமே, மாற்றுச் சமூகத்தினர் மண்டியிட்டது. சமூக நீதியை சாய்க்க நினைத்த வரலாற்றுப் பிழை, வன்னியர்கள் இல்லாத மாவட்டங்களில், எப்படி வன்னியர்க்கான உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்ற கேள்விக்கு விடையை ஏற்கெனவே அமலில் இருக்கும் 3 சதவிகித அருந்ததியர்க்கான உள்இட ஒதுக்கீடு அளித்துவிட்டது. பட்டியல் இனத்திற்கான பு8 சதவிகித ஒதுக்கீட்டில் 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உண்டு. அந்த எண்ணிக்கையில் அருந்ததியர்கள் இல்லையென்றால், இதர இனத்தவர் அந்த இடத்தில் நியமனம் பெறலாம். அதேபோன்று 3 சதவிகிதத்திற்கு மேல், அருந்ததியினரில் தகுதியானவர்கள் இருந்தால், அவர்கள் 15 சதவிகிதத்திலும் போட்டி போடலாம் என்று ஏற்கெனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மிகச் சிறிய நிர்வாகச் சிக்கலை, மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு போல, சில பிற்படுத்தப்பட்ட வகுப்பின் அரிதாரம் பூசிய அரசியல் தலைவர்கள் பேசியது அவர்களது அறிவின் குறைபாட்டை பறைசாற்றியது.

மிகவும் அரிதாகவே, பிற சமூகத்தினர் வன்னியர்களின் உள்இட ஒதுக்கீட்டை ஆதரித்தனர். பங்காளிக்குப் பல்லில் விஷம் என்ற சொல்வன்மையே பலரும் நிஜமாக்கினர். மேற்குத் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக ஒருங்கிணைப்பு தமிழகத்தின் இதர பகதிகளில் நிகழாததால் அரசியல் ரீதியாக இந்த உள்இட ஒதுக்கீடு பலமிழந்து போனது. நல்வாய்ப்பாக, புதிதாக பதவியேற்ற திமுக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதி மன்றத்தில் மேற்கொண்ட மேல்முறையீட்டால், உயர்நீதி மன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பில் கூறப்பட்ட அத்தனை எதிர்மறையான முடிவுகளும் பொடிப்பொடியாக்கி விட்டன. பழமையான தரவுகள் என்ற ஒரேயொரு காரணத்தால், மதுரையின் தீர்ப்பால் மரணித்த வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்தை உயிர்ப்பிக்க முடியவில்லை. இருப்பினும் உள்இட ஒதுக்கீட்டுக்குத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வன்னியர்களின் உள்இட ஒதுக்கீட்டு கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

தோல்வி என்பது வெற்றிக்கான முதல்படி தேவாசுர யுத்தம் போன்றது சமூக நீதிப் போராட்டம் எப்படி ஜெரூசலத்தை அடைந்தே தீருவோம் என்று உலகத்தில் உள்ள யூதர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, உழைத்தார்களோ, அவ்வாறே வன்னியர்களும் ஒன்றுபட்டு உழைத்தால், தனி உள்இட ஒதுக்கீடு சாத்தியமே. அம்பாசங்கர் கமிஷனின் மக்கட் தொகை கணக்கெடுப்பை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த பிறகும், அதன் அடிப்படையில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்து ஆணை பிறப்பித்த பிறகம், வன்னியர்க்கான உள்இட ஒதுக்கீடு என்று வரும்போது, அந்தப் புள்ளி விவரங்களை சந்தேகிப்பது என்பது ஓர் அப்பட்டமான சுயநலச் செயல். மக்கட்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்று மாயையை பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் தகர்த்து விட்டார். ஒரு சில மாதங்களிலேயே, சாதி வாரி கணக்கெடுப்பை எடுத்து முடிக்கப்போவதாக அவர் செய்திருக்கும் அறிவிப்பு, சமூக நீதியின் தாய்வீடான தமிழகத்திற்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு முன்னுதாரணம்.

வன்னியருக்கான உள்இட ஒதுக்கீடு எந்தச் சமூகத்திற்கும் எதிரானது அல்ல. சமூக நீதிச் செயல்பாடுகளின் அடுத்த கட்டம் அது. சமுதாயத்தின் அடுத்த கட்டம் அது, சமுதாயத்தின் 20 சதவிகித மக்களைப் புறந்தள்ளிவிட்டு, தமிழ் சமுதாயம் முன்னேற இயலாது. பட்டியல் இனத்தவர்க்கு உள்ள சட்டப் பாதுகாப்பு எதுவுமின்றி, அவர்கள் அளவிற்கு சில இடங்களில் அவர்களுக்குக் கீழாகவும், வறுமையிலும், வேலை இல்லாத் திண்டாட்டத்திலும் வாடும் வன்னிய இளைஞர்களுக்கு உள்ள ஒரே விடியல் இந்த உள்இடஒதுக்கீடு.

விடியலைத் தருவோம் என்ற முழக்கத்தோடு, அரியணையில் அமர்ந்துள்ள தமிழக அரசு வன்னியர்களுக்கான விடியலைத் தரும் என்று நம்புவோம். அதற்கான அழுத்தத்தை, அரசியலில் உருவாக்க, வன்னியப் பெருமக்கள் முயல வேண்டும். உச்சநீதிமன்றத்தால் அடிப்படையற்ற அச்சங்கள் அகற்றப்பட்டுவிட்ட இந்நிலையில், உள்இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றிட வாய்ப்பு கனிந்திருக்கும் இந்தப் பொழுதில், பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னிய சமூகத் தலைவர்களும் முறையே பிற அரசியல் கட்சிகளுடனும், மாற்று சமுதாயத் தலைவர்களுடனும் கலந்துரையாட வேண்டும். உள்இட ஒதுக்கீட்டில் உள்ள நியாயத்தை, அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

முடியாவிட்டால், எதிர்ப்பில்லை என்ற நிலைப்பாட்டையாவது வன்னியர் அல்லாத அரசியல் கட்சிகள் மற்றும் மாற்று சமுதாயத் தலைவர்கள் எடுக்கச் செய்ய வேண்டும். இதுவே சமூக நீதிக்கு உகந்தது.

சிறுபான்மை பகைக்க முடியாது! பெரும்பான்மை வாய்ப்பை நழுவவிடக் கூடாது. கேட்போம்! பெறுவோம்!

பெரும்பான்மையை சிறுபான்மை பகைக்க முடியாது என்பது கள யதார்த்தம் இது வன்னியர்க்கும் பொருந்தும், வன்னியர் அல்லாதவர்க்கும் பொருந்தும். ஊடகங்களிலும், இதற்கான கருத்தை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் தனிஇட ஒதுக்கீடுச் சட்டத்தை தமிழக அரசு எளிதில் இயற்றியது இயலும் பதவி என்பது தோளின் மேல் அணியும் துண்டு. கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி என்று அறிஞர் அண்ணா கூறியது போல கட்சி என்பது தோளில் தொங்கும் துண்டு. வன்னியர்களின் வாழ்வு என்பது இடுப்பின் உடுப்பு என்பதை உணர்ந்து வன்னியத் தலைவர்கள் செயல்பட வேண்டும். வன்னிய அடையாளத்தால் வாழ்வு பெற்றவர்கள் இதற்கான செயல்பாடுகளில் முழு மனதுடன் இறங்கி, ஒரு தவம் போல இதனைச் செய்து முடித்து உள்இட ஒதுக்கீடு என்ற வரத்தைப் பெற வேண்டும். சமூக நீதியின் முக்கிய மைல்கல்லாக வன்னியர்களின் 10.5 உள்இட ஒதுக்கீடு கிடைத்திட வேண்டும். இன்றும் கைக்கு எட்டிய தூரத்தில் இது உள்ளது. அதனைப் பெற தற்போது நாம் தவறினால் எப்போதும் சரித்திரம் நன்மை மண்ணிக்காது. நம் சாதியும் வளராது உயராது. பல்லாக்கை தூக்காதே! பல்லாக்கில் நீ ஏறு!