ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம் கோலாகலம்:
பக்தர்களுக்கு மகா லகு தரிசனம்
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. அன்று சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த ஆண்டு மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் பிரபலங்களுக்கும் சாதாரணப் பக்தர்களுக்கும் என அனைவருக்கும் 'மகா லகு' தரிசனம் (சற்று தூரத்தில் நின்று வழிபடுவது) அளிக்கப்படும். குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து வரிசையில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக, லிங்கோத்பவ தரிசனத்தைப் பக்தர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனத்தில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் மனதை கவரும் வகையில் தூர்ஜெட்டி கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி அன்று மட்டும் கோவில் வளாகத்தில் உள்ள 3-வது கோபுரமான திருமஞ்சன கோபுர வழி அடைக்கப்பட உள்ளது. மற்ற 3 கோபுர வாயில்கள் வழியாக வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சாமி தரிசனம் செய்ததும் பக்தர்கள் முருத்யுஞ்சய சாமி சன்னதி அருகில் இருந்து வெளியே வரலாம். இல்லையேல், கோவிலின் மேல் பகுதியில் இருந்தும் வரலாம் அல்லது நுழைவு வாயில் பகுதியிலேயே ஒரு பகுதியில் இருந்தும் வெளி வரலாம். பக்தர்களுக்கு குளியல் அறைகள், கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நிரந்தரமாக 80 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி அன்று 180 நடமாடும் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்க 1½ லட்சம் லட்டுகள், வடைகள், புளியோதரை, ஜிலேபி ஆகியவை தயாரித்து வழங்கப்படும். சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.