கிராமங்களில் பணியாற்ற டாக்டர்கள் தயங்கக்கூடாது-முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத்துறை சார்பில் கூட்டு மாநில மாநாடு நடத்தியது. கொரோனாவுக்கு பிந்தையாக காலத்தில் விரிவான ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் மாநாடு நடந்தது. மாநாட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். புதுவை, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், மருத்துவ அலுவலர்கள், சர்வதேச நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாடை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
காய்ச்சல், தலைவலி என மருத்துவமனைக்கு செல்வோருக்கு அறுவை சிகிச்சை, விபத்து பிரிவு என பிரபலமான மருத்துவ பிரிவுகள் மட்டும்தான் தெரியும். ஆனால் சமூக மருத்துவம் என்ற பிரிவை பற்றி தெரியாது. இதற்காக மாநாடு நடத்துவது பாராட்டுக்குரியது. நோய் வரும் முன் பாதுகாப்பதுதான் சமூக மருத்துவத்தின் முக்கிய பணி. நாடு முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. புதுவையில் 4 ஆயிரம் பேருக்கு ஒன்று உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகள் இன்றியமையாதது. சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, வீடுதேடி டாக்டர்கள் செல்ல வேண்டும் என கூறியிருந்தேன். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வீதி, வீதியாக டாக்டர்களை நடக்கவிடுவதா? என கேட்டனர். மருத்துவம் என்பது சேவை.
சேவை செய்யத்தான் வந்துள்ளோம் என்பதை டாக்டர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வீடு, வீடாக மருத்துவம் செய்வதால் குறைந்துவிட மாட்டீர்கள். கிராமப்புறங்களில் பணியாற்றுவதை டாக்டர்கள் சங்கடமாக நினைக்கின்றனர். அதை யாரும் தவறாக நினைக்கக்கூடாது. கிராமப்புறங்களில் பணியாற்ற டாக்டர்கள் முன்வர வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்பட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இங்கு 2 டாக்டர்கள், 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அங்கேயே சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். இதற்காக அரசு அதிக அக்கறை எடுத்துள்ளது. இதேபோல மருத்துவக்கல்லூரி க்கு தேவையான பேராசிரி யர்களை நியமித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய, புதிய துறைகளை கல்லூரியில் தொடங்க முடியும். புதுவையில் மருத்துவ பல்கலைக்கழகம் அமையும்போது இதை எல்லோரும் பாராட்டு வார்கள். இந்தியளவில் மருத்துவ வசதி அதிகம் கிடைக்கும் இடமாக புதுவைக்கு விருது கிடைத்துள்ளது. ஆனால் எனக்கு திருப்தியில்லை. இன்னும் சிறப்பான மருத்துவமும், வசதிகளும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.