அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
400 வீரர்கள், 800 காளைகள்
களம் இறங்குகிறார்கள்
அவனியாபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளையும் (15-ந் தேதி), 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டி ஆகிய இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை நிலவியது. இது தொடர்பான வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி சமாதான கூட்டம் நடந்தது. இதில் முடிவு எதுவும் எட்டப்படாதால் இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக மாநகராட்சி சார்பில் ரூ.17 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நேற்று வாடிவாசல் அமைப்பது, தடுப்பு வேலிகள், பார்வையாளர் மேடை, கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் நடக்கும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு இணையதளம் மூலம் கடந்த 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9, 699 காளைகளும் 5,399 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை சிவகங்கை திண்டுக்கல் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாடுபிடி வீரர்களும், 800 காளைகளும் களம் காண்கின்றன. இதில் மாடுபிடி வீரர்கள் சுழற்சி அடிப்படை அடிப்படையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள் பீரோ கட்டில் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. காயம் அடையும் வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கண்டிப்பாக உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி செயல்படுபவர்கள் களத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் தலைமையில் துணை ஆணையர் சாய் பிரணீத் மேற்பார்வையில் 15 உதவி கமிஷனர்கள் 45 இன்ஸ்பெக்டர்கள் 150 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.