ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
வாஷிங்டன்: இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும். இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், இந்தியா, அமெரிக்காவின் வலுவான நட்புறவு நாடு. பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பேற்க உள்ள இந்தியாவிற்கும், எனது நண்பர் பிரதமர் மோடிக்கும் எனது ஆதரவை அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.