பொதுக்குழுவை கூட்டுவதில்
ஓ.பி.எஸ்.சுக்கு சிக்கல்
சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு தனி நீதிபதி அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தார். அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல் முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தடையை நீக்க கோரி ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 30-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில் தன் தரப்பை வலுப்படுத்துவதற்காக புதிய நிர்வாகிகள் நியமனம், பொதுக்குழுவை கூட்டுவது ஆகிய பணிகளில் ஓ.பி.எஸ். தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்த பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுமட்டுமல்ல தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தான் அடிமட்டத்தில் இருந்து புதிய நிர்வாகிகளை நியமித்து கடைசியில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும். இதற்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தரப்பு கையெழுத்து போட வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்கனவே காலியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவை விரைவில் கூட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் இப்போது தள்ளி வைத்து இருப்பதாகவும் கோர்ட்டு முடிவை பொறுத்து வருகிற ஜனவரி மாதம் நடத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த தயக்கத்துக்கு காரணம் கோர்ட்டு வழக்கில் சிக்கி விசாரணைக்கு ஆஜராக நேரிட்டால் இடியாப்ப சிக்கலுக்குள் சிக்க நேரிடும் என்பதுதான். அதாவது தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றும் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர் என்றும் தான் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு வருகிறார். அப்படியானால் இருவரது கையெழுத்தும் பொதுக்குழுவை கூட்ட தேவை. இருவரும் கையெழுத்து போடாமல் தன்னிச்சையாக எப்படி பொதுக்குழுவை கூட்டினீர்கள் என்று கேள்வி வரும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமல் ஒரு கட்சி பொதுக்குழுவை கூட்ட முடியுமா? என்ற கேள்வியும் வரும். கட்சியின் கிளை கழகம் முதல் மாவட்ட பொறுப்பு வரை தேர்தல் நடைபெற்றதா? அந்த தேர்தல் செல்லுமா? என்ற கேள்விகளும் எழும். இந்த மாதிரியான கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்துவதை ஓ.பி.எஸ். விரும்பவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.