தி.மு.க. கூட்டணியில் இடம் பிடிக்க சில கட்சிகள் கடும் முயற்சி- மெகா கூட்டணியாக மாறுகிறது
சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்ற யோசனையில் எல்லா கட்சிகளும் மூழ்கி உள்ளன. குறிப்பாக சிறிய கட்சிகள் எந்த பக்கத்தில் இடம் பிடிப்பது என்று யோசிக்கத்தொடங்கி உள்ளன. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு உதயமானது. இதுவரை தனித்தே களம் கண்டுள்ளன. அதேநேரம் கூட்டணி பற்றி கமல் பேசியதும் கிடையாது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கிவிட்டு கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதுவரை கூட்டணி பற்றி வாயே திறக்காத கமல் முதல்முறையாக கூட்டணி சேரும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
தி.மு.க. கொள்கையுடன் ஒத்துப்போகும் கமல் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பிடிக்கவே முன்கூட்டியே கமல் தரப்பில் இருந்து இந்த சமிக்ஞை வெளியிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இது ராகுல் பிரதமர் வேட்பாளர் என்பதற்கு கிடைத்த வெற்றி என்றும் வருகிற தேர்தலில் மேலும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும்படியும் கேட்கும் என்று கூறப்படுகிறது.
எனவே காங்கிரசுக்கு கொடுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க ஏதுவாக கூடுதலாக கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை உருவாக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசயத்தில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு தெரியவில்லை. கட்சி தொடங்கப்பட்டது முதல் அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டது. ஆனால் இதுவரை ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. கூட வெற்றி பெற்றதில்லை. ஆனாலும் இதுபற்றி சீமான் கூறும்போது, 'நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு தமிழர் நலனுக்காக உழைப்பது தான். அப்படியிருந்தும் தேர்தலில் மக்கள் அங்கீகரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு விமர்சிப்பதில் மென்மையான போக்கையே அவர் கடைபிடித்து வருகிறார். எனவே வருங்காலத்தில் தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சிகளிடையே கூட்டணி ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பா.ம.க. தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க தி.மு.க.வும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்சிகள் கடைசி நேரத்தில் பா.ஜனதாவுடன் செல்லவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரை 2024 தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. தி.மு.க. உருவாக்கும் மெகா கூட்டணியில் இடம்பிடிக்க சிறிய கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன.