சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது
மாநிலங்களின் பொறுப்பு
பிரதமர் மோடி பேச்சு



அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் நடந்தது. இந்த முகாமில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:- உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதின் முயற்சியாக இந்த சிந்தனை மாநாடு நடைபெறுகிறது. போலீஸ் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், சட்டம்- ஒழுங்கை வலுப்படுத்தவும் பல்வேறு மாநில போலீசாருக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும். உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா காலத்தில் போலீசார் தங்கள் உயிர்களை பணயம் வைத்து பொதுமக்களுக்கு உதவினார்கள். அவர்கள் கடமையில் குறைவு எதுவும் இல்லை. போலீஸ் துறையை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகையின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை ஆகும். மாநிலங்கள் ஒன்றிணைந்து கற்றுக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும். சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு ஆகும். இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமைதி நிலவ ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. நாடு முன்னேறும்போது வளர்ச்சிப்பணிகள் கடைசி நபருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குற்றங்களை தடுக்க மட்டுமல்ல குற்ற விசாரணைக்கும் உதவுகிறது.