அரசியல் கட்சிகள் மக்களின் அறிவை குறுக்கிவிட்டன- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் தொடர் திட்டம் குறித்த 2 நாள் கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு சார்பாக இந்தியாவில் உள்ள மொழி, வர்த்தகம், கலாச்சாரம், பயணம், சுற்றுலா மற்றும் வரலாற்றை விளக்கும் வகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறுபட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே அமைப்பு ரீதியான இணைப்பை ஊக்குவித்து, அதன் வேற்றுமையை கொண்டாடுவதன் மூலம், இந்தியாவில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் 9 கல்லூரிகளை சார்ந்த 153 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது:- ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம், மத்திய மற்றும் மாநில அரசு பணிகள், சுதந்திரம் மற்றும் நீதி மன்றம் குறித்து பேசுகிறது. வெள்ளையர்கள் தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் நினைக்கின்றனர். ஆங்கிலேயர்கள் மத அடிப்படையில் 1905ம் ஆண்டு வங்கத்தை பிரித்தனர். அதனை எதிர்த்து தமிழ் நாட்டில் பாரதியார் ஏன் போராடினார். மகாத்மா காந்தியுடன் இணைந்து அனைவரும் போராடினார்கள். இந்தியா என்றுமே ஒருவரின் கீழ் இருந்தது இல்லை.
இந்தியா என்ற பெயரே வேறு ஒருவர்கள் வைத்தனர், இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் பாரத் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாரத் குறித்து நமக்கு தெரியப்படுத்த வில்லை. இந்தியாவின் வளர்ச்சி என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் இறையாண்மை என்பது தர்மமாக உள்ளது, முந்தைய காலங்களில் ஆட்சி செய்த அரசர்களும் தர்மத்தின் வழியில் தான் நடக்க வேண்டும் இல்லை என்றால் அவர்கள் தூக்கி எறிய படுவார்கள். இமாலயம் முதல் இலங்கைக்கு முன் உள்ள கடல் வரை பாரதம் என அழைக்கப்பட்டு உள்ளது. அரசியல் மக்கள் மத்தியில் வேற்றுமையை உண்டாகியது. ஒன்றாக இருந்த மாநிலங்கள் மொழிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டன. அதுவரை ஒன்றாக இருந்த நபர்கள் தற்போது நீ நான் என பேசி வருகின்றனர். அரசியல் என்பதே அதிகாரத்திற்கானது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இது பொருந்தும் அரசியல் கட்சிகள் மக்களின் அறிவை குறுக்கி உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.