காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. நவராத்திரி விழாவினை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். அதேபோன்று கோவில் வளாகத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் உற்சவர் காமாட்சி அம்மன் மாலை நேரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நவராத்திரி மண்டபத்தில் தினந்தோறும் மாலையில் சிறப்பு இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. பாட்டு, மாண்டலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, சிறப்பு தவில், நாதஸ்வரம் போன்ற கச்சேரிகள் புகழ்பெற்ற இன்னிசை கலைஞர்களால் நாள்தோறும் நடைபெறுகிறது. வருகிற 26-ந்தேதி தொடங்க உள்ள நவராத்திரி விழாவில் 27-ந்தேதி முதல் 5 -ந்தேதி வரை தினந்தோறும் காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ சக்கரத்திற்கு நவ ஆபரண பூஜை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறும். அந்த நேரத்தில் கோவில் கருவறை மூடப்பட்டிருக்கும். பின்னர் ஒரு மணிக்கு கோவில் நடை திறந்து நவாபரண பூஜையின் சிறப்பு பிரசாதமான சங்கு தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இது மிகவும் சக்தி வாய்ந்த பிரசாதம் ஆகும்.