இது போருக்கான காலம் அல்ல…
 ரஷிய அதிபர் புதினிடம் எடுத்துரைத்த மோடி



தாஷ்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவும் ரஷியாவும் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியா - ரஷியா இரு தரப்பு விஷயங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாம் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்" என்றார்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த புதின், 'உக்ரைன் மோதல் விஷயத்தில் உங்களின் நிலைப்பாட்டை நான் அறிவேன். போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்' என்றார். உக்ரைன் மீதான படையெடுப்புக்காக ரஷியாவை இந்தியா இதுவரை விமர்சிக்கவோ, கண்டனம் தெரிவிக்கவோ இல்லை. பேச்சுவார்த்தை மூலம் சிக்கலை தீர்க்கவேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியாவும் ரஷியாவும் பனிப்போர் காலத்திலிருந்தே நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன. அத்துடன், ரஷியா இந்தியாவிற்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் முக்கிய நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.