வீட்டுக்கே நேரடியாக சென்று
கோத்தபய ராஜபக்சேவை
அதிபர் ரணில் சந்தித்ததால் சர்ச்சை
கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினார். மேலும் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பதவியை விட்டு விலகினர். இலங்கை நெருக்கடியை தீர்க்க புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார். அவர் தற்போது கொழும்பில் உள்ள அரசு பங்களாவில் தங்கி உள்ளார். பொதுமக்கள் மீண்டும் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பங்களாவை சுற்றி பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரை பாதுகாக்கும் வகையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதற்கிடையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கோத்தபய ராஜபக்சே தங்கி உள்ள வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்கள் 2 பேரும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதார நெருக்கடி சூழல் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் விரைவில் 12 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர். இதில் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜ பக்சேவுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் மீண்டும் இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம் தலை தூக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் பொது மக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.