ராணிக்கு அஞ்சலி செலுத்த 3 நாட்கள் மக்களுக்கு அனுமதி- பிரமாண்டமான இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு



லண்டன்: இங்கிலாந்தில் நீண்ட காலம் அரசியாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தவர் ராணி எலிசபெத். இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகாலம் இவர் ஆட்சி செய்துள்ளார். தனது தந்தை 6-ம் ஜார்ஜ் மன்னரின் மறைவைத் தொடர்ந்து 1952-ம் ஆண்டு இவர் அரியணை ஏறினார். 96 வயதான அவர் முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து அவர் வெற்றிகரமாக மீட்டு இருந்தார். இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக அவர் லண்டனில் உள்ள தனது அரண்மனையான பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரால் அரண்மனைக்கு சென்று இருந்தார். அங்கு அவர் ஓய்வு எடுத்து வந்தார். அவருடன் அவரது மகள் இளவரசி ஆனும் உடன் இருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரசை நேரில் அழைத்து பேசினார். இதுதான் அவர் மேற்கொண்ட கடைசி அரசு நிகழ்ச்சியாகும். மறுநாள் புதன்கிழமை முதல் அவரது உடல்நலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 24 மணி நேரமும் அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவர் மரணமடைந்தார். ராணி எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு தீவிரமானதால் நேற்று முன்தினத்தில் இருந்தே அவரது குடும்பத்து உறுப்பினர்கள் பால்மரால் அரண்மனைக்கு சென்றனர். இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் பால்மரால் அரண்மனைக்கு விரைந்தார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ராணி மரண செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப வழக்கப்படி, அரசி அல்லது மன்னர் மரணமடைந்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வாரிசு பதவி ஏற்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். மரணமடைந்த ராணி எலிசபெத் உடல் இன்று அல்லது நாளை லண்டன் எடுத்துவரப்பட இருக்கிறது. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக இங்கிலாந்து புதிய மன்னர் சார்லஸ் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது ராணி எலிசபெத் இறுதி சடங்குகள் பற்றி முழு விவரங்கள் தெரியவரும்.

முதல் கட்டமாக இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்றாலும், ராணி எலிசபெத் மரணம் தொடர்பான நிகழ்ச்சிகள் சுமார் ஒரு மாதம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. என்றாலும், 10 நாட்கள் ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ராணியின் உடல் 3 நாட்களுக்கு வைக்கப்பட்டு இருக்கும். அந்த 3 நாட்களும் பொதுமக்கள் தினமும் 23 மணி நேரம் அஞ்சலிசெலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு ராணியின் உடல் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10-வது நாள் இறுதி சடங்குகள் நிகழ்ச்சி நடைபெறும். அரசு முறைப்படியான இறுதிச் சடங்குகள் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு ராணியின் உடல் வின்ட்சர் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு ராணி குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்வார்கள். 10-வது நாள் அரண்மனையில் இருந்து ராணியின் உடல் பிரமாண்டமான ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். லண்டனில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ஆராதனைகள் செய்யப்பட்ட பிறகு அடக்கம் செய்வதற்காக உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். லண்டனில் இங்கிலாந்து அரச குடும்பத்து உறுப்பினர்கள் மரணமடைந்தால் அவர்களது உடலை நல்லடக்கம் செய்ய பிரத்யேக கல்லறை தோட்டம் உள்ளது. அங்கு ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த இங்கிலாந்து மக்கள் லண்டனுக்கு திரண்டு வந்தபடி உள்ளனர். அவர்கள் அரண்மனை வாசலில் பூங்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி சென்றபடி உள்ளனர். ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு உள்ளனர்.