மக்கள் பிரச்சினைகளை ரஜினி கவர்னரிடம் பேசினாரா?- கே.எஸ்.அழகிரி கேள்வி



சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழக செயல்களில் கவர்னர் தலையிட்டு அரசியல் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மாநாட்டை நடத்துவது நல்ல முடிவு. இந்த மாநாட்டில் சில நடைமுறைகளை உருவாக்க வேண்டும். கவர்னர் தேவையில்லாமல் பல்கலைக்கழகங்களில் தலையிடுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். நடிகர் ரஜினி கவர்னரை சந்தித்து பேசியது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் தமிழக மக்களுக்கு கவர்னர் நிறைய செய்ய விரும்புகிறார் என்று கூறி இருக்கிறார். அதில் மகிழ்ச்சி.

தமிழக மக்கள் இப்போது விரும்புவதும், எதிர்பார்ப்பதும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான். எல்லா கட்சிகளும் இதை வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து 6 சதவீத வரிவசூல் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. ஆனால் திட்டங்கள் மூலம் திருப்பி கிடைப்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே இதையும் அதிகரிக்க வேண்டும். இந்த விசயங்கள் பற்றி கவர்னரிடம் ரஜினி பேசி இருக்க வேண்டும். பேசி இருப்பார் என்று நம்பிக்கை உள்ளது. இது பற்றிய தகவலையும் ரஜினி வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.