அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு
சென்னை: அ.திமு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட மோதலின் போது அ.தி.மு.க. அலுவலகத்தின் கதவுகளும் உடைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்ககோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக ஐகோர்ட்டு உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தியது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று பரபரப்பான தீர்ப்பை அளித்தார். கடந்த மாதம் 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அ.தி.மு.க.வில் ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், இதில் சிக்கல் ஏற்பட்டால் பொதுக்குழுவை நடத்த ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் இந்த பதவி செல்லாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமை பதவிக்கு ஏற்பட்டுள்ள இந்த சட்ட சிக்கலை எப்படி தீர்ப்பது என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இரவு 10.30 மணி வரை நீடித்தது.
அப்போது டெல்லியில் உள்ள மூத்த வக்கீல்களுடன் தொலைபேசி வாயிலாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மூத்த வக்கீல் விஜய் நாராயண் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் முன்பு முறையிட்டார். அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் முந்தைய நீதிபதியின் தீர்ப்பே தொடர வேண்டும் என உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் முறையிடப்பட்டது. ஆனால் நீதிபதிகள் திங்கட்கிழமை வழக்கு விசாரணையை எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் பொதுக்குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 5-ல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பொதுக்குழு கூட்டத்தை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து கூட்ட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஒற்றை தலைமை தீர்மானத்துடன் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்ய அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வத்தின் கையெழுத்தை பெறவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கு ஓ.பன்னீர் செல்வம் சம்மதிக்காத பட்சத்தில் ஐகோர்ட்டை நாடி முறையிட எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார். அப்போது கட்சியில் பொதுக்குழுவுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன? என்பது பற்றி விரிவாக எடுத்துக்கூற எடப்பாடி பழனிசாமி அணியினர் காய் நகர்த்தி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியினர் இப்போதே தொடங்கி உள்ளனர். அடுத்த மாதம் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பதவியை கொண்டு வருவதில் உள்ள சட்ட சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்பது பற்றியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மீண்டும் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் அமர வைத்து விட வேண்டும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள்.