தேசிய கட்சி அங்கீகாரத்தை நெருங்கும் ஆம் ஆத்மி… கோவாவில் அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்
புதுடெல்லி: தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை நெருங்க நினைக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதேபோல் கோவாவிலும் கால்பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, சட்டமன்ற தேர்தலில் 2 எம்எல்ஏக்களை பெற்றது. இந்நிலையில், கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை பெருமை தரும் நிகழ்வாக பார்ப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் தேசிய கட்சியாக மாறும். இதற்காக அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். ஆம் ஆத்மியின் அடுத்த பெரிய இலக்கு குஜராத் மாநில தேர்தல். இதற்காக அங்கு மாவட்ட வாரியாக பிரசாரம் தொடங்கியிருக்கிறார் கெஜ்ரிவால். டெல்லி பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அறிவித்ததுபோன்று குஜராத்திலும் ஆட்சியமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்வரை மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதேபோல் அதிரடி திட்டங்களை கெஜ்ரிவால் தொடர்ந்து அறிவித்து வருவதால் இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.