வேலைநிறுத்தம்  செய்யப்போவதாக  அறிவிப்பு- போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை



சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு அமல் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அதில் இழுபறி ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பலன்கள், மருத்துவ காப்பீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் போக்குவரத்து தொழிலாளர்கள் கூறி வருகிறார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 325 பணிமனைகளிலும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தொழிலாளர்களின் ரூ.12 ஆயிரம் கோடியை செலவு செய்து விட்டனர். 7 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு தரவில்லை என்ற மனக்குறையும் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் உள்ளது. 6 தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு ஏற்படாவிட்டால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கமானது (சி.ஐ.டி.யு.) 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றிட கோரி 22 அம்ச கோரிக்கைகளை குறிப்பிட்டு அதனை நிறைவேற்றிட வேண்டி இன்றோ (3-ந்தேதி) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நம்முடைய மாநகர் போக்குவரத்துக் கழகமானது, சென்னை பெருநகரம் மற்றும் புறநகர் மாவட்ட பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பெருமளவில் ஈடு செய்கின்ற முதன்மையான சேவை நிறுவனமாகும். எந்தவித லாப நோக்கமின்றி, அனைத்து நாட்களிலும் தனது சேவையினை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஒரு பொறுப்புள்ள நிறுவனம். இதனை தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும்.

எனவே, தொழிலாளர்கள் அனைவரும் எதிர்வரும் 3.8.2022 அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கு பெறாமல் வழக்கம் போல பணிக்குத் தவறாமல் வர வேண்டுமென இதன் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. இன்று (3-ந்தேதி) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளில் வேலைநிறுத்தம் செய்கிறார்களோ, அந்நாளில் வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இன்று (3-ந்தேதி) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நிலையாணை விதிகளின்படி, சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.