அதிமுக அலுவலகத்திற்கு சீல்: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது



அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், வருகிற 25-ந்தேதி இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜராகி, அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற கோரி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். இதேபோன்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வக்கீல் ராஜலட்சுமியும் நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிட்டார். இந்த 2 வழக்குகளும் நிலுவையில் இருந்தன.

நீதிபதி சதீஷ்குமார், மனுதாரர் எம்.எல்.ஏ.வாக இருப்பதால் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற்றே விசாரணைக்கு எடுக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கான மனு முறைப்படி தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த நிலையில், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியது. அப்போது, பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்துள்ளது. மேலும், அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கணினி, கோப்புகளை எடுத்துச் சென்ற பாதுகாப்பு வழங்கவில்லையா என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, பாதுகாப்பு தரவில்லை என ஈபிஎஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தை 400 பேர் முற்றுகையிட்டு எங்களை அனுமதிக்காமல் தடுத்ததாகவும் கூறினர்.