எதிர்க்கட்சிகள் நம்மை எப்படி விமர்சித்தாலும் நமது கட்சியின் நோக்கம் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே:
பிரதமர் மோடி பேச்சு
ஐதராபாத்: தெலுங்கானாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி; பாக்யா நகரான ஹைதராபாத், நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல சமஸ்தானங்கள், பிராந்தியங்களை ஒன்றிணைத்து, ஒரே பாரதத்துக்கு அடித்தளமிட்டவர் சர்தார் படேல். ஒரே பாரதத்தை சிறந்த பாரதமாக மாற்றுவது தான் நம்லட்சியம். நல திட்டங்களை செயல்படுத்துவதில், நாம் எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பா.ஜ., அரசுகள், பெண்கள் முன்னேற்றத்துக்காக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. அதனால் தான் கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்த அனைத்து தேர்தல்களிலும், பா.ஜ.,வுக்கான பெண்கள் ஆதரவுஅதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் நம்மை எப்படி விமர்சித்தாலும் நமது கட்சியின் நோக்கம் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே ஆகும். நாடு வாரிசு அரசியலைப் பார்த்தும், வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளைப் பார்த்தும் நொந்துவிட்டது. வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சிகளால், அரசியலில் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது. பாஜக நிர்வாகிகள் நாட்டு மக்களுக்காக சேவையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம். சர்தார் வல்லபாய் படேல் உருவாக்கிய இந்த ஒருங்கிணைந்த இந்தியாவினை நாம் வலிமை மிக்க இந்தியாவாக உருவாக்க பாடுபட வேண்டும். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு-வை கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.