அக்னிபத் திட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் - விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: அக்னிபத் திட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் - விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உட்பட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சிகள் சார்பில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, கீதநாதன், அபிஷேகம், சேதுசெல்வம், மார்க்சிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் பெருமாள், ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், விடுதலை சிறுத்தைகள் தேவபொழிலன், செந்தில், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்பிரமணியன், மோதிலால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.