அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம்- பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை காலை நடக்கிறது. இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதால் இதை தடுக்கும் நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தை தடுக்கும் நடவடிக்கையாக ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி உள்ளார்.
அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,640 பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கையெழுத்திட்டு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களில் 100 பேர் முதல் 150 பேர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். எனவே மற்றவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களில் பலர் தற்போது எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.