கவர்னர் மாளிகைக்கு பெண்களை அழைத்து நேரில் குறைகேட்டார் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: கவர்னர் மாளிகை என்பது சாதாரண மக்களின் நிழல் கூட பட முடியாத இடம். உயர் அந்தஸ்தில் உள்ள மேல்தட்டு மக்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மட்டுமே ராஜ் பவனுக்குள் செல்லும் நிலை உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தெலுங்கானா ராஜ்பவனின் கதவுகள் ஏழை-எளிய மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி புரட்சியை உருவாக்கி இருப்பது கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். கவர்னராக பொறுப்பேற்றதும் கவர்னர் மாளிகையில் மக்கள் தர்பார் நடத்தப்படும் என்றார். ஆனால் கொரோனா காரணமாக அதை நிறைவேற்ற முடியவில்லை. சமீப காலமாக தெலுங்கானாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து முதலில் பெண்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்தார். ராஜ்பவன் கதவுகள் ஏழை, எளிய பெண்களின் குறைகளை சொல்ல வசதியாக திறந்து வைக்கப்படுகிறது. தெலுங்கானா கவர்னர் சாமானிய பெண்களை நேரடியாக சந்திக்கிறார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு பதிவு செய்ய தனி தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது. இந்த தகவல் தெரிந்ததும் ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டு வருகிறார்கள். 400 பெண்கள்தொலைபேசி மூலம் பதிவு செய்திருந்தனர். மின்னஞ்சலிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். காலை 12 மணி அளவில் பொதுமக்கள் ராஜ்பவனுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
குறைகளோடு வந்தவர்கள் ராஜ்பவனை பிரமிப்புடன் பார்த்தபடி சென்றனர். பெண்கள் ஒவ்வொருவராக நேரில் அழைத்து கவர்னர் டாக்டர் தமிழிசை குறைகளை கேட்டார். பலதுறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். கடனுதவி போன்ற சிறு சிறு பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. சில பிரச்சினைகள் மாநில அரசின் துறைகளுக்கு அனுப்பப்பட்டது. கவர்னரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இதுபற்றி கவர்னர் தமிழிசை கூறும்போது, 'இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி சம்பந்தப்படுத்தி பார்ப்பதும் தவறு. என்னை பொறுத்த வரை அரசில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் எல்லா அலுவலகங்களும் மக்கள் செல்லும் இடமாக இருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு சில இடங்களுக்கு செல்ல தயக்கம் இருக்கலாம். நானும் ஒரு பெண்ணாக இருப்பதால் பெண்கள் தயக்கமில்லாமல் வந்தனர். மாதம் ஒரு முறை இதே போல் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளேன்' என்றார்.