மாநிலங்களவை தேர்தல்- தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்
டெல்லி மேல்-சபையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜஷே்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவ நீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற 29-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 6 டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க. வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.
இதில் தி.மு.க. 3 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து 1 இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியது.
இதன்படி தி.மு.க. வேட்பாளர்களாக சு.கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25-ந்தேதி சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இது தவிர 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.
இதில் தி.மு.க. , அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாவிட்டால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என்ற அடிப்படையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வருகிற 3-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் வாபஸ் பெற வாய்ப்பு இல்லை என்பதால் வருகிற 3-ந்தேதி மாலை இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும்.
6 எம்.பி.க்கள் பதவிக்கு கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் (தி.மு.க.), ப.சிதம்பரம் (காங்கிரஸ்), சி.வி.சண்முகம், தர்மர் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேர் மட்டுமே கட்சி சார்பில் களத்தில் நிற்பதால் இந்த 6 பேரும் வெற்றி பெற்றதாக 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.