சென்னையில் காய்ச்சலுடன் வந்த 2,297 பேரில்
68 பேருக்கு கொரோனா
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருபவர்களை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி தெரியவந்தால் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொற்று உறுதியானவர்களின் வீடு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை மாநகராட்சி சுகாதாரத்துறை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. 3-வது அலையில் காய்ச்சல் அறிகுறியுடன் வந்தவர்களில் 3-ல் ஒரு பங்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது காய்ச்சலுடன் சிகிச்சைக்கு வந்த 2 ஆயிரத்து 297 பேரில் 68 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது.
மேலும் கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு லேசான அறிகுறி அல்லது மாறுபட்ட புதிய அறிகுறி தென்படுகிறது. சுகாதார அதிகாரி டாக்டர் ஜெகதீசன் கூறும்போது, தொண்டை வலி, இருமல், சுவையின்மை மற்றும் காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் முன் கூட்டியே தேவையான சிகிச்சை மற்றும் தனிமைப் படுத்த முடியும் என்றார். தற்போது வணிக நிறுவனங்களில் காய்ச்சல் இருப்பவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, மண்டலங்களுக்கு மாதிரி கலெக்ஷனுக்காக இரண்டு வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் களத்தில் நேரில் சென்று ஆய்வு மேற் கொள்ளும் போது, காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களை அருகில் உள்ள நகர்ப்புற அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதே நேரம் அளவுக்கு அதிகமான பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் நேரடியாக மாதிரிகள் சேகரிக்க வாகனங்களில் அந்த இடங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.