ஜூலை 11 வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது - சுப்ரீம் கோர்ட்
மும்பை: சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இதற்கிடையே, கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.
சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் சிவசேனா சட்டமன்றக் குழு தலைவராக அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், துணை சபாநாயகரின் நோட்டீசுக்கு பதிலளிக்க ஜூலை 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கி இடைக்கால தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும், அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.