நேபாளம்: லும்பினி மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார்.
அதன்பின்னர் லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் மோடி மற்றும் நேபாள பிரதமர் இருவரும் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் நேபாள பிரதமரும், இந்திய பிரதமரும் அங்கு புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி இருவருக்குமிடையிலான நட்பை வெளிப்படுத்தினார்கள்.
புத்த கலாச்சார பாரம்பரிய மையத்திற்கு அடிக்கல் நாட்டும் இந்திய பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா
கோவிலை ஒட்டி அமைந்துள்ள அசோக தூண் அருகே இருவரும் தீபம் ஏற்றினர். கி.மு. 249-ல் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்ட தூண், லும்பினி புத்தர் பிறந்த இடம் என்பதற்கான முதல் கல்வெட்டுச் சான்றாக திகழ்கிறது. அதன்பின்னர் டெல்லி சர்வதேச புத்த கூட்டமைப்புக்கு சொந்தமான இடத்தில், புத்த கலாச்சார பாரம்பரிய மையம் கட்டுவதற்கு பிரதமர் மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து அடிக்கல் நாட்டினர். அங்கு நடைபெற்ற பிரார்த்தனையிலும் பங்கேற்றனர்.
இதுதவிர மேலும் சில நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க உள்ளார். குறிப்பாக நேபாள அரசின் கீழ் இயங்கும் லும்பினி வளச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் புத்த ஜெய்ந்தி விழாவில் உரையாற்றுகிறார். அதன்பின்னர் இரு நாட்டு பிரதமர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.