மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்வில் இழுபறி- முடிவு எடுக்க முடியாமல் திணறும் அ.தி.மு.க. தலைவர்கள்



சென்னை:

பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் மேல்சபை எம்.பி. பதவியை கேட்டு வருகிறார். அதுபோக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் எம்.பி. பதவிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளும் பதவி கேட்கிறார்கள்.

இதுதொடர்பாக இன்று சோனியா, ராகுல் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ப.சிதம்பரத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த சில தினங்களாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. வேட்பாளர் தேர்வில் அவர்கள் இருவருமே பிடிவாதமாக இருப்பதால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

வேட்பாளரை முடிவு செய்வதற்காக சமீபத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் 27 பேர் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி பேசினார்கள். வேட்பாளர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். என்றாலும் அந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஏக மனதாக தேர்வு செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் 2 பேரில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவும், மற்றொருவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருப்பார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக உள்ளார். ஆனால் இந்த விசயத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலைக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் மேலும் ஒருவரை தேர்வு செய்வதில்தான் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

அ.தி.மு.க.வின் மற்றொரு வேட்பாளராக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சி.வி. சண்முகத்துக்கு வாய்ப்பு அளித்தால் மேல்சபை எம்.பி.க்கள் இருவருமே வட மாவட்டத்தை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதை ஏற்க இயலாது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சொல்கிறார்கள். எனவே தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் தனக்கு மேல்சபை எம்.பி. பதவி வேண்டும் என்று இன்பதுரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.

சையது கானை எம்.பி.யாக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. சையதுகான் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவரை எம்.பி. ஆக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

வேட்பாளர் தேர்வில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் வேட்பாளர் தேர்வு தள்ளி போகிறது. நேற்று இதில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.வி. சண்முகம் தொடர்ந்து வலியுறுத்துவதால் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து சிக்கல் நீடித்தபடி உள்ளது.

மேல்சபை எம்.பி. பதவிக்கு விண்ணப்பிக்க 31-ந்தேதி வரை அவகாசம் உள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதால் அதற்குள் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாகி உள்ளனர்.

இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு மீண்டும் மீண்டும் தள்ளி போகிறது. எனவே மனுதாக்கல் முடிவடைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.