காற்று மாசு காரணமாக
ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு
ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்



அமெரிக்காவை சேர்ந்த தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழ் சார்பில் நடத்தப்பட்ட காற்று மாசு உயிரிழப்பு குறித்த புதிய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, உலக அளவில் ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள், மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் தொழில்சாலைகளில் இருந்து வெளிவரும் அசுத்தமான காற்று காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து 55 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வங்காளதேசம் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டின் காரணமாக 1,42,883 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

காற்று மாசு உயிரிழப்பு நாடுகள் பட்டியலில் அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவும், சீனாவும் காற்று மாசுபாடு உயிரிழப்பில் உலகில் முன்னணியில் உள்ளன.

அதே சமயம் புருனே, கத்தார் மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை குறைந்த காற்று மாசு இறப்பு விகிதங்களை கொண்டுள்ளன. காற்று மாசுவுடன் சிகரெட் புகைத்தல் மற்றும் பல்வேறு புகை ஆகியவையும் இணைவதன் மூலம் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

எனினும் உயிரிழப்பு குறித்த இறப்புசான்றிதழில், காற்று மாசுபாடு காரணம் என்பதற்கு பதில், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், பிற நுரையீரல் பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோய்களை உள்ளிட்டவை பதிவாகி உள்ளதாகவும் உலகளாவிய மாசு கண்காணிப்பக இயக்குனர் பிலிப் லாண்ட்ரிகன் தெரிவித்துள்ளார்.