தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் பேட்டி



தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல சற்று அதிகரித்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த ஒரு வாரத்தில் 111 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் தொற்று அதிகமாக பதவி வருவதால் அங்கு தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுக்கள் முகாமிட்டு பரிசோதனை, கண்காணிப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஐ.டி. வளாகத்தில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை பற்றி பயப்படக்கூடாது. காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தொற்று மிகக் குறைவாக உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மைக்ரோ பிளான் போடச் சொல்லி அறிவுறுத்தி உள்ளோம்.

அன்றாடம் நடக்கும் முகாம்களில் தடுப்பூசி போடுவதை வலுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் இயல்பான வாழ்க்கை தொடர ஒத்துழைப்பு தர வேண்டும்.

29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை கிடையாது. டெல்லியில் 100 பேருக்கு 3 அல்லது 4 பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் 1000 பேரில் 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று வரை 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 32 பேருக்கு உறுதியானது. மொத்தம் 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்.

இதுவரையில் 7,490 பேரில் 3,080 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 111 பேரில் 2 பேர் குணமடைந்து உள்ளனர். இனிவரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

நோய் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கான அவசியம் தற்போது இல்லை. தேவையற்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய சூழல் இல்லை.

கோடை காலத்தில் வெயில் காரணமாக ஏற்படக்கூடிய நோய்களை எதிர்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.