ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து கொண்டேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் உள்ளது என்று எனக்கு தெரியாது. அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார் என்றும் எனக்கு தெரியாது. மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை விபரங்களை தலைமை செயலாளரிடம் தான் கேட்டு தெரிந்துக் கொள்வேன்.
சிகிச்சை பெற்ற போது ஒருமுறை கூட ஜெயலலிதாவை நான் நேரில் பார்த்ததில்லை. கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் கடைசியாக பார்த்தேன். அதன் பின் அவரை பார்க்கவில்லை.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி இன்று ஆஜரானார் அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது 75 நாட்களும் நான் மருத்துவமனைக்கு சென்றேன். அதில் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன். சசிகலா தான் உடன் இருந்து கவனித்துக்கொண்டார்” என்று வாக்குமூலம் அளித்தார்.