தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்- புதிய திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு


   


சென்னை:

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டசபை யில் எல்லோரும் பார்க்கும் வகையிலும் பெரிய திரையில் ஒளிபரப்ப கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது.

நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புது அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

சட்டசபையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. இதை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த 5-ந்தேதி அமைச்சரவை கூட்டத்திலும் பட்ஜெட் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்தார்.

இந்த நிலையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.