ம.தி.மு.க. தலைமைக்கழக செயலாளராக
துரை வைகோ தேர்வுக்கு பொதுக்குழு ஒப்புதல்



சென்னை:

ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் பதவிக்கு வைகோவின் மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டு உள்ளார். இது கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் துரைவைகோவை கட்சிப் பணிக்கு கொண்டு வருவதை ஏற்கவில்லை. அவர்கள் வைகோவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைகோவின் முடிவுக்கு எதிராக சிவகங்கையில் விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். இது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ம.தி.மு.க. 28-வது பொதுக்குழு கூட்டம் அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மகாலில்  நடைபெற்றது. கூட்டத்தில் வைகோ, துரைவைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பு தெரிவித்து இருந்த சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் கூட்டத்தை புறக்கணித்து பங்கேற்கவில்லை.

இதேபோல் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் நாகை மோகன், வழக்கறிஞர் அழகு சுந்தரம், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த தேவதாஸ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ம.தி.மு.க. பொதுச்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவைத் தலைவர் இல்லாமல் கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக துரைவைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்கு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.