வங்கிகள் 4 நாட்கள் மூடப்படுவதால்
சேவை முடங்கும் அபாயம்



சென்னை:

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் வருகிற 28, 29-ந்தேதி ஆகிய இருநாட்கள் நாடு முழுவதும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கைவிடுதல் மற்றும் தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராம மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இதில் பங்கேற்பதால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கும். பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்றவை பாதிக்கும் என்று சங்க தலைவர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 73 ஆயிரம் வங்கி கிளைகள் மற்றும் அதில் பணியாற்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 2 நாட்கள் நடைபெறுகின்ற நிலையில் வருகிற சனி (26-ந்தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (27-ந்தேதி) இரு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெறுவதால் 4 நாட்கள் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. ஏ.டி.எம். சேவையும் பாதிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.