மணிப்பூர் முதல்வராக
2வது முறையாக பதவியேற்கிறார்
பிரேன் சிங்
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதையடுத்து, புதிய அரசு அமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது. முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக தலைநகர் இம்பாலில் சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்களான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்ற கட்சி தலைவராக பிரேன் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.
இதேபோல் கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக நாளை ஆளுநரை சந்திக்க உள்ளனர். பாஜக எம்எல்ஏக்கள் கூட்டமும் நாளை நடைபெறுகிறது. மார்ச் 23ம் தேதியில் இருந்து 25ம் தேதிக்குள் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவின் புதிய முதல்வர் யார்? என்பதை முடிவு செய்வதற்காக நாளை சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் பதவியேற்பு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்.